- சி.மகேந்திரன் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிட் கட்சி

Advertisment

ருள் கவிந்த, குளிர் அடர்ந்த நள்ளிரவிலிருந்து விடுபட்டு, அதிகாலையை நோக்கி, அந்த நாள் மெல்ல நகர்ந்து செல்கிறது. பறப்பதற்கு கூச்சலிடும் பறவைகளின், காலை நேர குதூகலத்தை பார்க்கவும் முடியவில்லை; கேட்கவும் முடியவில்லை. பறவை இனங்கள் அசைவற்று, குளிரில் முடங்கிவிட்டன. மரம்செடி, கொடிகள், தலை கவிழ்ந்து கிடக்கின்றன. தாங்கிக் கொள்ள முடியாத குளிரில் செயலிழந்து விட்டன தாவரங்கள். இந்த தருணத்தில் அதிகாலை விழிப்பு எத்தனை துயரமானது.

d

நான் அதிகாலையிலேயே விழித்துக் கொள்ளும் பழக்கம் கொண்டவன். காலை 3:30 மணியிலிருந்து 4 மணிக்குள் விழித்துக் கொண்டு விடுவேன். அதற்கு மேல் என்னால் படுக்கையில் இருக்க இயலாது. குளிர் காலத்தில் அதிகாலை விழிப்பு என்பது எத்தகைய சங்கடமானது என்பதை இப்பொழுதுதான் உணருகிறேன். இது போன்றதொரு அதிகாலை குளிரை இதற்கு முன்னர் நான் சந்தித்ததில்லை.

Advertisment

படுக்கையிலிருந்து எழுகிறேன். கை உறைகளை மாட்டிக்கொண்டு வெளியே வருவதற்குள் அரைமணி நேரம் தேவைப்படுகிறது. முந்தைய நாள்தான் அலைந்து திரிந்து, அந்த தடித்த கையுறையை வாங்கினேன். எங்கள் முகாமின் பாதுகாப்புக்காக தற்காலிக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, அதில் பனி மூட்டங்களை ஊடுருவி செல்லும் மஞ்சள் வண்ண விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. குளிர் பிரதேசங்களில் மஞ்சள் விளக்குகள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

கூடாரம் இருக்கும் இடத்தைப் பாதுகாப்பதற்கு தொண்டர் படை குழு ஒன்று அமைத்து செயல்படுகிறது. குழுவில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மிகுந்த கட்டுப்பாடு கொண்டவர்கள். ஒரு சிறுமியும், இளைஞர் ஒருவரும் அன்றைய இரவுக்கு பாதுகாப்பு. இருவரும் அண்ணன், தங்கை என்பதை நான் அறிவேன். அண்ணன் ஏதோ கணக்குப் பார்த்து கொண்டிருக்கிறார். அவர் பெயர் மணீந்தர் சிங்.

தங்கை அமர்ந்த நிலையில் தூங்கிக்கொண் டிருக்கிறார். தங்கைக்கு பனிரெண்டு வயது இருக்கலாம். எல்லோரும் உறக்கத்திலிருக்கும் போது இவர்களின் சேவை அர்ப்பணிப்பு என்னை மிகவும் ஈர்த்தது. தூங்கக்கூடாது என்ற வைராக்கியம், சிறுமிக்கு இருந்தாலும், அறியாம லேயே அவள் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கித் தூங்கி விழுகிறாள். தேர்வு நேரத்தில் கையில் புத்கத்துடன் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி விழும் நம் குழந்தைகள் நினைவுக்கு வருகிறார்கள். சிறுமியை பரிதாபமாகப் பார்க்கிறேன்.

Advertisment

அதை அப்படியே படமெடுக்க முயற்சிக்கிறேன். கையுறைகள் இருப்பதால் ‘கிளிக்’ செய்ய முடியவில்லை. கையுறைகளைக் கழற்று கின்றேன். ஒரு நொடியில் விரல்கள் விறைத்து விட்டன. சிரமப்பட்டு படம் எடுத்துவிடுகிறேன். மணீந்தர் சிங்கிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன். அவர் கணக்கு நோட்டுப் புத்தகத்தை மூடி வைக்கிறார். அரைமணி நேரம் பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களை செய்து கொண்டிருந்தோம்.

ddகைகள் நடுங்க, பற்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள, "சூடாக வெந்நீர் கிடைக்குமா' என்றேன். கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார். மணி ஐந்தை நெருங்குகிறது. லங்கர் திறந்திருப்பார்கள் என்கிறார் மணீந்தர். விவசாயிகளின் போராட்ட பாசறையாக அமைந்துள்ள டெல்லியின் புற எல்லைகளில் லங்கர் என்ற சொல்லை அறியாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. கடும் குளிரை விரட்டியடிக்க இந்த லங்கர் என்னும் கூட்டு சமூக உழைப்புதான் இவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்துவருகிறது.

லங்கர் இலவச உணவு வழங்கும் இடம். பசிப்பிணியை போக்க வந்த மாமருந்து. அணையா அடுப்பமைத்து அனைவருக்கும் உணவு வழங்கும் தமிழ் மண்ணின் வள்ளலார் நமக்குத் தெரியும். சீக்கியர்கள் அனைவருமே வள்ளலாராகவே எனக்குத் தெரிகிறார்கள்.

அதிகாலையிலிருந்தே லங்கரில் அணையா அடுப்புகள் அனல் பரப்பி எரியத் தொடங்கி விடுகின்றன. நம் வீட்டில்கூட எல்லா நேரங்களிலும் டீ கிடைக்காது. லங்கரில் எப்பொழுதும் கிடைக் கும். டீயை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிப்போடு தயாரித்துக் கொடுக்கும் இவர்கள், "லங்கர் ஒரு சேவை' என்கிறார்கள். கொடிய குளிருக்கு இதமாக ஒரு கப் டீ தருவதை விடவும் வேறு என்ன சேவை இருக்க முடியும்.

மணீந்தர் சிங், டீ உற்பத்தி செய்யும் லங்கருக்கு என்னை அழைத்துச் செல்கிறார். ஐந்து பேர் டீ தயாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சீனி போடுவதில்லை. வெல்லக் கட்டிகளை மட்டும் போடுகிறார்கள். பால், தேயிலைத் தூள், வெல்லக் கட்டி ஆகியவற்றை ஒன்றுசேர்க்கும் இவர்களது பயிற்சி அலாதியானது. அதை ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

டீ தயாரிக்கும் நண்பர் ஒருவரோடு பேச்சுக் கொடுத்தேன். அவர் என்னை "தமிழ்நாடா' என்றார். "ஆம்' என்றேன். மீண்டும் என்னை ’"வாங்க'’என்றார். என் தாய்மொழியை பிறர் அறியா ஒரு தேசத்தில், வாங்க என்று என்னை அழைத்த தமிழ்ச் சொல், கடுங்குளிருக்கு கிடைத்த டீயைப்போல தனி உற்சாகம் தந்தது. உணர்வுகள் அவருடன் நெருங்கிவிட்டது. அவரும் என்னுடன் நெருங்கிவிட்டார். அவர் தன் பணியை மற்ற ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, என்னோடு பேசத் தொடங்கினார். துபாயில் பத்தாண்டுகளுக்குமேல் பணியில் இருந்திருக்கிறார். அவரோடு சேர்ந்து பணியாற்றிய தமிழக நண்பர்களிடம் சில தமிழ் சொற்களை கற்றறிந்திருக்கிறார். நீங்கள் லங்கரில் பணியாற்றுகிறீர்களே உங்களுக்கு ஏதாவது ஊதியம் உண்டா என்று, அவரிடம் நான் வெளிப்படையாகவே கேட்டுவிட்டேன்.

அவரது உடல் மொழியிலிருந்து, அவர் சங்கடப்படுவதைப் போல உணர்ந்தேன். அவர் வாய் திறந்து மெல்ல பேசத் தொடங்கினார். "லங்கர் சேவை, பிறருக்கு பசியை போக்கும் சேவை. இவை இறைவனுக்கும் நாங்கள் செலுத்தும் காணிக்கை' என்றார். லங்கரில் பணியாற்றும் ஒவ்வொருவரும் அது இறைவனுக்கு செய்யும் சேவையாகவே கருதிக் கொள்கிறார்கள்.

அந்த நண்பர் ஒரு பெரிய இரும்புத் தொட்டியை காட்டுகிறார். அதன் நீள அகலங்களை என்னால் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை. "ஒரே நேரத்தில் ஐந்நூறு லிட்டர் டீ அதில் ஊற்றப்படும்' என்றார். அந்த குளிர் பிரதேசத்திலும் ஐந்து மணி நேரம் டீ ஆறாமல் அப்படியே இருக்கும் என்று மேலும் விளக்கம் தருகிறார். டீ டேங்கர் வித்தியாசமான தோற்றத்தைத் தருகிறது.

நான்கு பக்கங்களிலும் திருகுடன் கூடிய பைப் அமைத்திருக்கிறார்கள். அதன் பக்கத்தில் காகித குவளைகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு வரிசையாக இருக்கிறது. ஒரே நேரத்தில் பைப் வழியாக எட்டு பேர் டீ பிடித்துக்கொள்ள முடியும். யார் வேண்டுமானாலும் பைப்பைத் திறந்து கொள்ள லாம். எவ்வளவு டீ வேண்டுமானாலும் குடித்துக்கொள்ளலாம்.

நாள் முழுவதும் லங்கர் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு பர்லாங்குக்கு ஒரு இடத்தில், லங்கர் அமைந்திருக்கிறது. நுகர்வு கலாச்சாரத்தில் நம்மை நாமே இன்று இழந்து கொண்டிருக்கின்றோம், உணவுக்குள் மறைந்து கிடக்கும் வியாபாரத் தந்திரங்களில் நம் உயிராற்றலை கொஞ்சம் கொஞ்ச மாக இழந்து வருகிறோம். மனித உடலின்மீது கார்ப்பரேட் நுகர்வு உலகம், ஒரு பெரும் தாக்குதலை நடத்திக்கொண்டிருக் கிறது. லங்கர் நம்மை அரவணைத்து, கலப்படம் இல்லாத கட்டணமில்லாத உணவை தாயன்போடு வழங்குகிறது. எத்தனை வகையான உணவுப் பொருட்கள். சப்பாத்தி, ரொட்டி, ஆலுபுரோட்டா, நெய்சோறு, புலாவு எவ்வாறெல்லாம் சுவையூட்டி உணவைத் தரமுடியுமோ அவ்வாறெல்லாம் தந்து கொண்டே இருக்கிறார்கள். மாலை நேரங்களில் இனிப்பு வகைகள், பக்கோடா வகைகள் தரப்படுகின்றன. தங்களுக்கென்று தரமான உணவும் பிறருக்கு தரம் குறைந்த உணவு என்ற இழிநிலை இங்கு துளிகூட இல்லை. அவை அனைத்தும் கருணையையும் உணவையும் வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு லங்கர் முன்பும் ஒரு ஒலிப்பெருக்கி, "உணவு சாப்பிட்டுச் செல்லுங்கள்' என்று அழைப்பை விடுக்க, வயது முதிர்ந்த பஞ்சாப் பெரியவர்கள் வாசலில் தலைதாழ்த்தி கைகளைப் பற்றிச் சாப்பிட அழைக்கும் விருந்தோம்பல் பிரபஞ்ச சுகத்தைத் தந்துவிடுகிறது.

அந்தப் பிரபஞ்ச சுகத்தில் ஒரு ஏழைச் சிறுவனின் குரல் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது

(புரட்சிப் பயணம் தொடரும்)